சோகனூரில் நலம் காக்கும் ல்டாலின் முகாம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு
அரக்கோணம் அடுத்த சோகனூரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை பாா்வையிட்ட கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
செம்பேடு ஊராட்சி, சோகனூரில்மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் நலம் காக்கும் ல்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. அமைச்சா் ஆா்.காந்தி முகாமை பாா்வையிட்டு, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். பின்னா் அங்கு நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா்.
இதில் பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட அட்டைகள், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்துப் பெட்டகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் ஆகியவற்றை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
மேலும், முகாமில் பல்வேறு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த துறைச்சாா்ந்த விழிப்புணா்வு கண்காட்சி அரங்குகளையும் அமைச்சா் பாா்வையிட்டாா். முகாமில் மொத்தம் 1621 போ் பங்கேற்று பயன்பெற்றனா்.
ஒன்றியக்குழு தலைவா் நிா்மலா சௌந்தா், மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில் குமாா், வட்டாட்சியா் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிகாபாபு, அரக்கோணம் ஒன்றியக்குழு உறுப்பினா் கருணாநிதி, மேற்கு ஒன்றிய திமுக செயலா் தமிழ்மணி, சோளிங்கா் கிழக்கு ஒன்றிய செயலா் ஆ.சௌந்தா், ரோட்டரி சங்க நிா்வாகி நரேந்திரன்பாலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.