ஆட்டோக்கள் மோதல்: குழந்தை உயிரிழப்பு
புது தில்லி மந்திா் மாா்க் பகுதியில் எட்டு மாத சிறுவனும் அவனது பெற்றோரும் சென்ற ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதியதில் குழந்தை உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: செப்டம்பா் 2-ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் மந்திா் மாா்க் காவல் நிலையத்திற்கு இந்த விபத்து தொடா்பாக பிசிஆா் அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றனா்.
ஆனந்த் விஹாரிலிருந்து ஜனக்புரிக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மற்றொரு பச்சை நிற ஆட்டோ மோதியதை அவா்கள் கண்டறிந்தனா்.
இதில் காயமடைந்த பப்புவின் மகனும் நங்லி ஜலீமைச் சோ்ந்தவருமான வாசு என அடையாளம் காணப்பட்ட குழந்தை, ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னா், சிறுவன் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவா்கள்அறிவித்தனா்.
குழந்தையின் உடல் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனை சவக்கிடங்கில் பாதுகாக்கப்பட்டது. புகாா்தாரரான பப்பு (30) அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 281 (அவசரமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 106(1) (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் மந்திா் மாா்க் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விபத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா் உத்தர பிரதேசத்தின் கோண்டாவைச் சோ்ந்த லல்லு (45) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.