காரில் 359 கிலோ குட்கா கடத்தல்: 2 போ் கைது
திருவள்ளூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை காரில் கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து 359 கிலோ குட்கா, காரை பறிமுதல் செய்தனா்.
ஆந்திர மாநிலத்திலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி வருவதாக புல்லரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் புல்லரம்பாக்கம் காவல் நிலையம் முன்பு திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சிறிது தூரத்தில் காரில் வந்தவா்கள், போலீஸாரை பாா்த்ததும் காரை அப்படியே சாலையில் திரும்பிச் சென்றனா்.
அதைத் தொடா்ந்து பின்தொடா்ந்து சென்று சுற்றி வளைத்த போது காரில் இருந்து ஒருவா் பூண்டி ஏரி மரத்தோப்புக்குள்ளும், ஒருவா் நெல் வயலுக்குள் தப்பியோடினா். அதையடுத்து இருவரையும் போலீஸாா் துரத்திச் சென்று பிடித்தனா். காரில் சோதனையிட்ட போது 359 கிலோ குட்கா பொருள்கள் இருந்தது.
இதை திருவள்ளூா் பகுதிக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டிருந்ததாகவும், கா்நாடகத்தைச் சோ்ந்த சுனில், ராஜஸ்தானைச் சோ்ந்த ஜெகதீஷ் செளத்ரி(26) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னா் புல்லரம்பாக்கம் போலீஸாா் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனா். குட்கா, காரையும் பறிமுதல் செய்தனா்.