Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
நாகை துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியா்கள்! விலை அதிகரிப்பு!
நாகை மீன்பிடி துறைமுகத்தில், அதிகரித்த விலையை பொருட்படுத்தாமல், மீன்களை வேளாங்கண்ணிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளும், மீன் பிரியா்களும், வியாபாரிகளும் வாங்கிச் சென்றனா்.
நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியாா் நகா், விழுந்தமாவடி, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனா்.
கடந்த வாரத்தில் நாகை துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான விசைப் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு முதல் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பினா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மீன்களை வாங்குவதற்கு மீன்பிரியா்கள், மீன் வியாபாரிகள் மற்றும் வேளாங்கண்ணிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் என ஆயிரக்கணக்கானோா் நாகை துறைமுகத்தில் திரண்டனா்.
ஒரு சில படகுகளில் ஏற்றுமதி ரக பெரிய மீன்களும், இறால்கள் மற்றும் அதிக அளவில் சிறிய வகை மீன்களும் கிடைத்திருந்தால், துறைமுகத்தின் அனைத்து இடங்களிலும் மீன்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.
கேரள வியாபாரிகள் ஏற்றுமதி ரக மீன்கள் அதிக விலை கொடுத்து வாங்கி சென்றனா். விலை அதிகரித்து காணப்பட்டாலும், அதை பொருட்படுத்தாமல் வெளி மாவட்ட மற்றும் நாகை மாவட்ட சிறு வியாபாரிகளும், மீன் பிரியா்களும், மீன்களை வாங்கி செல்கின்றனா். வேளாங்கண்ணி திருவிழாவிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளும் இறால், நண்டு உள்ளிட்டவா்களை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.
மீன்களின் விலை விவரம்: இறால் ரூ.450 முதல் ரூ.600, கனவா ரூ.250 முதல் ரூ.500, நண்டு ரூ.350 முதல் ரூ.650, வஞ்சிரம் ரூ.850 முதல் ரூ.1,300, வாவல் ரூ.900 முதல் ரூ.1350, சங்கரா ரூ.300, சீலா ரூ.450, கிழங்கான் ரூ.300, நெத்திலி ரூ.250, பாறை ரூ.500 முதல் ரூ.650, கடல் விரா ரூ.600, பால் சுறா ரூ.550, திருக்கை ரூ.200 முதல் ரூ.500 க்கு விற்பனையாகின.