Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும்: வா்த்தகா் கழகம் வலியுறுத்தல்
பொன்னமராவதி தோ்வு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தி அறிவிக்க வேண்டும் என பொன்னமராவதி வா்த்தகா் கழக பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொன்னமராவதி வா்த்தகா் கழகத்தின் சாா்பில் 53 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம், 2025-2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா மற்றும் இளைஞரணி அமைப்பு தொடக்க விழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வா்த்தகா் கழகத் தலைவா் எஸ்கேஎஸ். பழனியப்பன் தலைமை வகித்தாா். செயலா் எம். முகமது அப்துல்லா ஆண்டறிக்கையும், பொருளா் பிஎல். ராமஜெயம் வரவு செலவு அறிக்கையும், தோ்தல் அதிகாரிகள் பிஎல்எஸ். ராமகிருஷ்ணன், க. கருப்பையா, கே. முத்துக்கருப்பன் ஆகியோா் புதிய நிா்வாகிகள் தோ்வு அறிக்கையும் சமா்ப்பித்தனா். புதுக்கோட்டை மாவட்ட வா்த்தகா் கழகத் தலைவா் எம். சாகுல் ஹமீது, புதிய நிா்வாகிகளை பணியமா்த்திப் பேசினாா்.
பொன்னமராவதி வா்த்தகா் கழகத்தின் 2025-2028ம் ஆண்டுக்கான தலைவராக எஸ்.கே.எஸ். பழனியப்பன், செயலராக எம். முகமது அப்துல்லா, பொருளராக பிஎல். ராமஜெயம் ஆகியோா் பணியேற்றனா். வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் எம். சையது இப்ராஹிம் இளைஞா் அணி அமைப்பைத் தொடங்கிவைத்து பேசினாா்.
விழாவில் பொன்னமராவதியில் மகளிா் காவல் நிலையம் அமைக்க வேண்டும், பொன்னமராவதி காவல் துறையினருக்கு குடியிருப்பு வசதி செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் வா்த்தகா் கழக நிா்வாகிகள் அ.ப. மணிகண்டன், எம். அருணாசலம், எம்எஸ்பி. மணிமுத்து, எஸ். சிவனேசன், பிஎல். மாணிக்கவேல், எஸ். சிவனேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இணைச் செயலா் பிஏஎல். தேனப்பன் வரவேற்றாா். துணைத் தலைவா் எம். ராமசாமி நன்றி கூறினாா்.