லண்டனில் பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுயிக்கின் குடும்பத்தினரை லண்டனில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக, கடந்த 30-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.
முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களது சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் - செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர்.
— M.K.Stalin (@mkstalin) September 7, 2025
நேரில் அவர்கள் வைத்த… pic.twitter.com/RrjoShkdi1
முதலில் ஜெர்மனி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவா்களுடனும், முதலீட்டாளா்களுடனும் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, லண்டன் நகருக்குச் சென்ற அவர், முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுயிக்கின் குடும்பத்தினரை லண்டனில் சந்தித்ததாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவருடைய பதிவில், “முல்லைப் பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களது சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் - செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர்.
நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம். வாழ்க ஜான் பென்னிகுயிக் அவர்களது புகழ்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: பாகிஸ்தான் பாடகி மீது கரடி தாக்குதல்