Malavika Mohanan: ``முதல் வாய்ப்பு இப்படித்தான் கிடைத்து'' - மம்மூட்டிக்கு குறித...
அதிமுகவில் பதவியை ராஜிநாமா செய்கிறேன்: முன்னாள் எம்.பி. சத்தியபாமா
பதவிப் பறிப்பு எதிரொலியாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 1,000 பேர் ராஜிநாமா செய்துள்ளனர். மேலும், அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமாவும் தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்தவருமான செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார்.
இதற்கு, பத்து நாள் கெடு அளிப்பதாகவும், அதற்குள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்து, பதவிப் பறிப்பை மேற்கொண்டார்.
இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய, நகர, கிளை மற்றும் சார்பு அணிகளைச் சேர்ந்த மற்றும் கோபிசெட்டிப்பாளையம் பகுதி நிர்வாகிகளும் என சுமார் 2,000 நிர்வாகிகள் தங்களது பதவிகளையும் ராஜிநாமா செய்வதாகக் கூறி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியிடம் கடிதங்களை அனுப்பினர்.
இந்த நிலையில், கோபி செட்டிபாளையம் அதிமுக அலுவலகத்துக்கு வந்த அதிமுக நிர்வாகிகள் 1000-க்கும் மேற்பட்டோர் தங்களது ராஜிநாமா கடிதங்களை அளித்தனர்.
இதுகுறித்து முன்னாள் எம்பி சத்தியபாமா கூறுகையில், “செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி பதவியை ராஜிநாமா செய்ய உள்ளேன். எதற்கும் தயாராக இருக்கிறேன். அனைவரும் ஒன்றுபட்டு இயக்கத்துக்காக பாடுபட வேண்டும் என்பதே லட்சியம்” எனத் தெரிவித்தார்.