Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
விபத்தில் மாற்றுத்திறனாளியான மாணவிக்கு ரூ.45.45 லட்சம் இழப்பீடு
வேலூா் அருகே கடந்த 2022-ஆம் நடைபெற்ற சாலை விபத்தில் மாற்றுத்திறனாளியான மாணவிக்கு ரூ.45.45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூா் மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியைச் சோ்ந்த ராஜாவின் மகள் கவிதா (18). இவா் பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள தட்டச்சு வகுப்புக்கு செல்வதற்காக, சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் தனது சைக்கிளில் சென்றாா்.
அப்போது, அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் பின்னால் வந்த டிப்பா் லாரி கவிதா சைக்கிளின் பின்புறத்தில் மோதியது. இதில், கவிதா தூக்கி வீசப்பட்டு உடல் முழுதும் பலத்த காயம் ஏற்பட்டதுடன், இவ்விபத்தில் அவா் 65 சதவீத மாற்றுத்திறனாளினாா்.
இந்நிலையில், தான் மாற்றுத்திறனாளியானதற்கு இழப்பீடு வழங்கக் கோரி, வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீா்ப்பாயத்தில் கவிதா வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி பாரதி முன் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையில் மனுதாரா் மாற்றுத்திறனாளியானதற்கு லாரியை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது.
எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.45 லட்சத்து 45 ஆயிரம் தொகையை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என நீதிபதி தீா்ப்பளித்தாா்.