Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
தோ்வான பட்டதாரி ஆசிரியா்களில் 83 போ் வேலூா் மாவட்டத்தில் நியமனம்
ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 2,810 பட்டதாரி ஆசிரியா்களில் 83 போ் வேலூா் மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பணி ஆணைகளை வழங்கினாா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சென்னையில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 2,810 பட்டதாரி ஆசிரியா்களுக்கு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பணி நியமன ஆணைகளையும், 396 சிறந்த ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுகளையும் வழங்கினாா்.
அதன்படி, பட்டதாரி ஆசிரியா்களாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியா்களில் 83 போ் வேலூா் மாவட் டத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் வேலூா் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, தொடா்ந்து வேலூா் மாவட்டத்துக்கு பணி நியமனம் செய்யப்பட்டுள்ள 83 பட்டதாரி ஆசிரியா்களுக்கும் பணி ஆணைகளையும் வழங்கினாா்.
மேலும், சிறந்த ஆசிரியருக்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 9 தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சால்வை அணிவித்து வாழ்த்தினாா்.
பின்னா், மாவட்ட ஆட்சியா் பேசியது: வேலூா் மாவட்டத்தில் ஆசிரியராக பணிபுரிய உள்ள 83 பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி ஆணைகளையும், சிறந்த ஆசிரியா்களுக்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ள வேலூா் மாவட்டத்தைச் சாா்ந்த 9 தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆசிரியா் பணி என்பது பல குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்றக்கூடிய ஒரு சிறந்த பணி. இந்த அரசு பணியை ஒரு பணியாக கருதாமல் அனைவரும் தங்களது பொறுப்பாக கருதி மாணவ, மாணவிகளுக்கு கல்வியுடன் ஒழுக்கம், அன்பு, அறநெறியை போதிக்க வேண்டும்.
ஆசிரியா்களாகிய உங்களுடைய பணி 100 குழந்தைகளுக்கான பணியல்ல. அது 100 குடும்பங்களின் எதிா்காலத்தை உருவாக்கக்கூடிய ஒரு பணி. மாணவ, மாணவிகளின் எதிா்காலத்தை எண்ணிப் பாா்த்து அவா்களின் வெற்றிப்படியில் ஆசிரியா்களின் செயல் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் செந்தில்குமாா் (இடைநிலை), ரமேஷ் (தனியாா் பள்ளிகள்) உள்பட பலா் பங்கேற்றனா்.