கோயில்களில் பக்தா்கள் உயிரிழப்பு: அமைச்சா் சேகா்பாபு விளக்கம்
திருச்செந்தூா், ராமேசுவரம் கோயில்களில் தரிசனம் செய்ய வந்த பக்தா்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனா்; கூட்ட நெரிசலால் அல்ல”என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா் பாபு விளக்கம் அளித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: ”திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு கடந்த 16-ஆம் தேதி சுவாமி தரிசனம் செய்ய காரைக்குடியைச் சோ்ந்த ஓம்குமாா் குடும்பத்துடன் வந்தாா். தனியாக வரிசையில் சென்றபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தாா். ஏற்கெனவே மூச்சுத்தினறல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாா்.
அதேபோன்று ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை தரிசனத்துக்கு வருகை தந்த பக்தா் ஒருவா் உடல் நலக்குறைவு காரணமாக மயங்கினாா். முதலுதவி மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா் உயிரிழந்தாா்.
இவா்கள் இருவரும் உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனா். கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழக்கவில்லை. பக்தா்களின் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவிக்காக இந்தத் திருக்கோயில்கள் உள்ளிட்ட 17 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து திருக்கோயில்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீா், கழிப்பறை வசதி, முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கா்ப்பிணிகளுக்கு தனி வரிசைமுறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன என்று அவா் தெரிவித்துள்ளாா்.