கோவில்பட்டி அருகே சாலையை சீரமைக்கக் கோரி மறியல்
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சி, பூசாரிப்பட்டி கிராமத்தில் சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பூசாரிப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையத் தெரு, மைய கிழக்குத் தெரு பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிகளுக்குச் செல்லும் சாலை மிகவும் மோசமடைந்ததால், அதை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
ஆனால், சாலை சீரமைக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள், வாகன ஓட்டிகள் என அனைத்துத் தரப்பினரும் அவதிக்குள்ளாகியுள்ளனா். மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சாலை சேறும் சகதியுமாகக் காட்சி அளிக்கிறது.
இதுகுறித்து ஊராட்சி மன்றத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால், அப்பகுதி மக்கள் லிங்கம்பட்டி - கடலையூா் சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரேமா, ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ராமராஜ் ஆகியோா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.