சம்மனை பூஜை அறையிலா மாட்ட முடியும்? சீமான் கேள்வி
தர்மபுரி: காவல்துறை அளிக்கும் சம்மனை கிழிக்காமல், பூஜை அறையிலா மாட்ட முடியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரின் கீழ் காவல்துறையினர் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில், தர்மபுரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் சீமான்.
அப்போது அவர் பேசுகையில், கருணாநிதி மகனா? பிரபாகரன் மகனா? என்று தேர்தலில் போட்டியிட்டு பார்க்கலாம். 2026ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து நின்று வென்று காட்டுவோம் என சவால் விடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு ஆண்டுக்குள் 6 முறை கருக்கலைப்பு செய்தது நானாகத்தான் இருக்கும். அதுவும் சிறைக்குள் இருந்துகொண்டே கருக்கலைப்பு செய்திருக்கிறேன்.
ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் வரும் ஆட்சி மாறும் என்பதை காவல்துறை மனதில் வைக்க வேண்டும்.
சம்மனை கிழிக்காமல், காவல்துறை அளித்த சம்மனை பூஜை அறையிலா மாட்ட முடியும்? என்றும் சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
காலாளியை அடித்து இழுத்துச் செல்லும் அளவுக்கு என்ன நடந்தது? சம்மனை கிழிப்பது அவ்வளவு பெரிய குற்றமா? சம்மனை கிழிப்பதும் கிழிக்காமல் இருப்பதும் எங்கள் விருப்பம். விசாரணைக்கு வர மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லையே. வீட்டில் நான் இல்லாதது தெரிந்தும், சம்மனை வீட்டில் ஒட்டச் சென்றது ஏன்?
விருப்பமில்லாத பெண்ணை நான் பாலியல் வன்கொடுமை செய்தது போல பேசுகிறார்கள். என்னை சமாளிக்க முடியாமல் திமுக அரசு அந்தப் பெண்ணை அழைத்து வருகிறது. அந்தப் பெண் பாலியல் புகார் கூறினால் குற்றமாகி விடுமா? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.