சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்: உயர் நீதிமன்ற கிளை
மதுரை: திருநெல்வேலியில், வங்கி ஒன்றில் போலியான நபர்களுக்கு வங்கிக் கடன் அளித்து ரூ.2 கோடி ஏமாற்றிய வழக்கை, சிபிஐ முறையாக விசாரணை நடத்தவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
பாளையங்கோட்டையில் உள்ள வங்கியில், போலியான ஆவணங்களை அளித்து கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் வங்கிக்கு ரூ.2 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வங்கியின் மேலாளர் உள்பட 13 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், 8 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்த நிலையில், மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் சிபிஐ சரியாக விசாரணை நடத்தவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
மேலும், சிபிஐ தனது விசாரணையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மக்கள் நம்பிக்கையைப் பெறும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
சிபிஐ மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால்தான் சில வழக்குகளில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்கிறார்கள். ஒரு நிர்பந்தத்துக்கும் உள்படாமல் சிபிஐ விசாரணை நடத்தும் என நம்புகிறார்கள்.
ஆனால், சிபிஐ விசாரணையில் தவறுகள் நடப்பதாகத் தெரிகிறது. ஒரு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டு சிலரை மட்டும் வழக்கில் சேர்ப்பதாக வழக்குரைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பணமோசடி வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பணத்தை திருப்பி அளித்துவிட்டால், அவர்களை சாட்சியாக சிபிஐ மாற்றிவிடுகிறது. இதனால்தான் சிபிஐ மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. மேலும் சிபிஐ மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். சிபிஐ விசாரணை அமைப்பை யாரும் கேள்வி கேட்க முடியாது என நினைக்கின்றனர் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
எனவே, சிபிஐ இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டுமென்றால், சிபிஐ வழக்குகளில் குற்றவாளிகள் பெயர் சேர்ப்பது, வழக்குப்பதிவு செய்வதை சிபிஐ இயக்குநர் கண்காணிக்க வேண்டும். குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வது என அனைத்தையும் சிபிஐ இயக்குநர் கண்காணிக்க வேண்டும். வழக்கு தொடர்பான அறிவியல் பூர்வமான தொழில்நுட்பங்களையும் உயர் அதிகாரிகள் அறிந்திருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.