`சூரியனார் கோயில் மடத்தின் சொத்துகளை அபகரிக்க ஆதீனம் திருமணம்’ - குற்றச்சாட்டும் ஆதீனத்தின் பதிலும்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயில் மடம் மிகவும் பழைமையானது. இந்த மடத்தின் ஆதீனமாக 28 வது குருமகா சந்நிதானம் மகாலிங்க சுவாமிகள் இருந்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி பெங்களூரை சேர்ந்த ஹேமா ஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில் மகாலிங்க சுவாமி திருமணம் செய்து கொண்டதை நேற்று உறுதி செய்தார்.
இந்நிலையில் சூரியனார் கோயில் மடத்தில், ஆதீனம் ஸ்ரீ காரியமாக இருக்கும் சுவாமிநாத சுவாமிகள் ஆதீன மடத்தின் சொத்துகளை அபகரிக்க மகாலிங்க சுவாமிகள் திருமணம் செய்து கொண்டதாக குற்றம்சாட்டினார்.
இதைத்தொடர்ந்து, `திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து நீக்கப்பட்ட சுவாமிநாத சுவாமிகளை, நான் மடத்தில் ஸ்ரீ காரியமாக நியமித்தேன். அவர் மடத்தில் தங்காமல் வீட்டிற்கு சென்று தனது வேடத்தை மாற்றிக் கொள்கிறார்’ என ஆதீனம் மகாலிங்க சுவாமி கூறினார். அடுத்தடுத்து செய்தியாளர்களை சந்தித்த இருவரும் ஒருவருக்கொருவர் விமர்சனங்கள் செய்து கொண்டது ஆன்மிக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாமிநாத சுவாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ``ஆதீனத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்பதற்காக இதனை தெரிவிக்கிறேன். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமாஸ்ரீயை ஆதீனம் 28 வது குருமகா சந்நிதானம் மகாலிங்க சுவாமிகள் திருமணம் செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. அந்தப் பெண் குறித்து விசாரித்ததில் அவர் பல குற்ற பின்னணி கொண்டவர். அவருக்கு அதிகளவில் சொத்துக்கள் இருப்பதாக கூறி பலரை ஏமாற்றி இருப்பதும் தெரிய வந்தது. சூரியனார் கோவில் ஆதீன மடத்தின் சுமார் ரூ.1,500 கோடி சொத்துக்களை அபகரிக்க திட்டம் தீட்டி, இந்த பதிவு திருமணத்தை செய்துள்ளார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
துறவறத்தில் உள்ளவர்கள் இல்லறம் நோக்கிச் செல்வது ஏற்புடையதல்ல. இது ஆதீன சம்பிரதாயத்திற்கு எதிரானது. எனவே சூரியனார் கோவில் ஆதீனத்தின் மாண்பு போற்றி பாதுகாக்கும் வகையில் சைவ ஆதீன குருமகாசந்நிதானங்கள் இதில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். பெங்களூரைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ மீது இருக்கக்கூடிய குற்றச்சாட்டுகளை முழுமையாக சேகரித்து திருவிடைமருதுார் டி.எஸ்.பி.,யிடம் புகாராக அளிக்க உள்ளோம்” என்றார்.
இதைதொடர்ந்து இவருடைய குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆதீனம் 28 வது குருமகா சந்நிதானம் மகாலிங்க சுவாமிகள் கூறியதாவது, ``மடத்தில் சம்பிரதாயப்படி திருமணம் ஆனவர்கள் குரு மகா சந்நிதானங்களாக இருப்பதற்கு எந்த தடையும் இல்லை. இதுகுறித்து அறநிலையத்துறைக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளோம். ஆதீன குருமகா சந்நிதானங்களுக்கு என தனி அதிகாரம் உள்ளது. நான் ஆதீனமாக பதவி ஏற்றது முதல் சூரியனார் கோவில் ஆதீன தலைமை மடத்தில் ரூ.1.40 கோடி மதிப்பில் பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளேன்.
மடத்தில் சொத்துக்களை காக்க பல சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். மடத்தின் சொத்துக்களை முறையாக பாதுகாத்து நிர்வாகம் செய்ய வேண்டும் என்ற கடமையை பலரது ஒத்துழைப்போடு செய்துவருகிறேன். திருவாடுதுறை ஆதீனத்திலிருந்து நீக்கப்பட்ட சுவாமிநாத சுவாமிகளை, நான் மடத்தில் ஸ்ரீ காரியமாக நியமித்தேன். ஆனால் அவர் மடத்தில் தங்காமல் அவரது வீட்டிற்கு சென்று விடுவார். அங்கு சென்றதும் அவர் தனது வேடத்தை மாற்றிக் கொள்வார். சுவாமிநாத சுவாமிகள் ஏற்கனவே மணல் கொள்ளையில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டு உண்டு. இருப்பினும், அவர் ஆன்மீக பணிகளை செய்ய விரும்பியதால், அது குறித்து கவனத்தில் கொள்ளாமல் பணிகளை செய்ய அனுமதித்தேன். சுவாமிநாத சுவாமியை யாரோ தவறாக இயக்குகின்றனர். குருவின் கட்டளையை ஏற்று அவர் நடப்பதில்லை” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb