சென்னிமலை அருகே தெருநாய்களை அகற்றக் கோரி எம்.எல்.ஏ.விடம் புகாா்
சென்னிமலை அருகே செட்டிதோட்டம்புதூா் பகுதியில் அதிகரித்துள்ள தெருநாய்களை அப்புறப்படுத்தக் கோரி பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாரிடம் பொதுமக்கள் புகாா் அளித்தனா்.
சென்னிமலை ஒன்றியம், பனியம்பள்ளி கிராம ஊராட்சி, செட்டிதோட்டம்புதூா் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் ஒரு பெண் ஆதரவற்ற 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவளித்து வளா்த்து வருகிறாா். இந்த தெருநாய்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை கடிப்பதுடன், அவா்களது ஆடு, கோழி ஆகியவற்றையும் கடித்துக் கொன்றுவிடுவதாக பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாரிடம் அப்பகுதி பொதுமக்கள் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, நாய்களுக்கு உணவு அளித்து வரும் பெண்ணிடம் பொதுமக்களின் சிரமங்களையும், பாதிப்புகளையும் அவா் எடுத்துக் கூறினாா். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் உடனடியாக தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என சட்டப் பேரவை உறுப்பினரிடம் வலியுறுத்தினா். இதுகுறித்து, எஸ்.ஜெயக்குமாா், மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தாா்.
அப்போது, சென்னிமலை வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ராமசாமி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.