ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த தினேஷ் கார்த்திக்..! டு பிளெஸ்ஸி அதிரடியால் வென்ற ஜேஎஸ்க...
அரிட்டாப்பட்டி: `சட்டமன்ற தீர்மானத்துக்கு பயந்து அல்ல; மக்களின் அன்புக்கு பயந்து..!’ - அண்ணாமலை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பல்லுயிர் பாரம்பரியத் தலமான அரிட்டாப்பட்டி உட்பட 11 ஊராட்சிப்பகுதிகள் பாதிக்கப்படும் வகையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தா குழும நிறுவனத்துக்கு ஏலம் விட்டது மத்திய அரசு.
இதையறிந்து இப்பகுதி பொதுமக்கள் கடந்த 3 மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார்கள். அதைத்தொடர்ந்து தமிழக அரசு டங்ஸ்டனுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்நிலையில்தான் கடந்த வாரம் மத்திய அரசு இத்திட்டத்தை கைவிடுவதாக அறிவிக்க மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதைத்தொடர்ந்து இப்பகுதி மக்கள் முதலமைச்சருக்கு விழா எடுத்து நன்றி தெரிவித்தார்கள்.
மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கும் மக்கள் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அ.வள்ளாளப்பட்டியில் நடந்த விழாவில் கலந்து கொண்டனர்.
பின்பு அண்ணாமலை பேசும்போது "மத்திய அரசின் திட்டத்தை ரத்து செய்வது எளிதான காரியமல்ல, 24 மணி நேரத்தில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து அமைச்சர் கிஷன் ரெட்டி நடவடிக்கை எடுத்தார். இப்பகுதி மக்களின் போராட்டம் மிக நியாமான போராட்டம், பிரதமர் மோடி தமிழக மக்களின் உணர்வோடு கலந்தவர்.
கடந்த கால ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஏலம் விடப்பட்டது. இப்பகுதியிலுள்ள பல்லுயிர் பாரம்பரியதலம் என்பது குறித்தும், அதிகமான அளவில் விவசாயம் நடைபெறும் பகுதி என்பதும் மத்திய அரசுக்கு தெரியாது. ஏலம் விடப்பட்டது தெரிந்ததும் தமிழக அரசு அமைதியாக இருந்தது.
ஜல்லிக்கட்டை திரும்ப கொண்டு வந்தவர் பிரதமர் மோடி, இப்போது டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து என்றும் தமிழக மக்களோடு இருக்கிறேன் என நிரூபித்து உள்ளார்.
சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டதால் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்துவிட்டதாக இங்கு வந்த முதலமைச்சர் பேசியுள்ளார். வாரந்தோறும்தான் தீர்மானம் போடுகிறார்கள், அதற்கெல்லாம் பயந்து டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யவில்லை. மக்களின் அன்புக்கு பயந்து திட்டத்தை ரத்து செய்துள்ளோம். நாங்களாக எந்த பாராட்டு விழாவுக்கு செல்வதில்லை, மக்களின் கோரிக்கைகளை ஏற்று பாராட்டு விழாவிற்கு வந்துள்ளோம்,
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால் மாநில அரசு அறிவிக்க வேண்டும், தவறு நடந்தால் சுட்டி காட்டுங்கள், மத்திய அரசு திருத்திக் கொள்ளும். மத்திய அரசு மீது நம்பிக்கை வைய்யுங்கள் மக்களுக்கு நல்லதை செய்வோம், இந்தியாவுக்கே சான்றாக இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது" என பேசினார்,
மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பேசும்போது, "பிரதமர் மோடி தமிழ் மீது பற்று கொண்டவர், தமிழர்களின் செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்துள்ளார், ஜல்லிக்கட்டு போட்டியை திரும்ப கொண்டு வந்தவர்.
பல ஆண்டுகளாக தமிழ் கலாசாரத்தை பாதுகாத்து வருகிறார், மதுரையும், காசியும் மிக பிரசித்திபெற்ற கோயில்களை கொண்டுள்ளது, பிரதமர் மோடி காசியில் தமிழ் சங்கம் நடத்தி உலகெங்கும் தமிழை கொண்டு சேர்த்தார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ் மீனவர்களை பிரதமர் மீட்டுக்கொண்டு வந்தார். அரசியலுக்காக பிரதமர் எதையும் செய்யவில்லை, தமிழ் மக்களின் மீதான அன்பால் தமிழ் மக்களுக்கு உதவிகளை செய்கிறார். அம்பலக்காரர்கள் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை வைத்தார்கள், பிரதமர் மோடியின் ஆலோசனைக்குப் பின் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டது, மக்கள் என்னை ஊருக்கு அழைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs