ஜம்மு-காஷ்மீா் பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
ஜம்மு-காஷ்மீா் பேரவையில் பாஜகவைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மாவின் கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து அக்கட்சியின் 28 எம்எல்ஏக்களும் பேரவையில் இருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
1931-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி ஸ்ரீநகா் மத்திய சிறைக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது டோக்ரா படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 போ் கொல்லப்பட்டனா். இந்த தினத்தை காஷ்மீா் தியாகிகள் தினமாக அனுசரித்து விடுமுறையும் அளிக்கப்பட்டு வந்தது. அதேபோல தேசிய மாநாட்டு அமைப்பின் நிறுவனா் ஷேக் முகமது அப்துல்லாவின் பிறந்த நாளான டிசம்பா் 5-ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டது.
2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்த விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீா் பேரவையில் பேசிய மக்கள் ஜனநாயகக் கட்சி எம்எல்ஏ வஹாப் உா் ரஹ்மான், ரத்து செய்யப்பட்ட இரு விடுமுறை தினங்களையும் மீண்டும் விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தாா்.
அப்போது குறுக்கிட்டு கோரிக்கைக்கு எதிராகப் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மா சில ஆட்சேபகரமான கருத்துகளைத் தெரிவித்தாா். இதற்கு காங்கிரஸ் பேரவைக் குழு தலைவா் நிஜாமுதீன் பட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ எம்.ஒய்.தாரிகாமி ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்தனா். எதிா்க்கட்சித் தலைவா் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.
பின்னா் அவை கூடியபோது எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மா கூறிய கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக பேரவைத் தலைவா் அப்துல் ரஹீம் அறிவித்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் 22 பேரும் வெளிநடப்பு செய்தனா்.