``நீண்ட கால லிவ் இன் உறவில், ஆண் மீது பாலியல் வன்கொடுமை புகார் கூற முடியாது'' -சுப்ரீம் கோர்ட்
சமீப காலமாக லிவ் இன் உறவில் வாழும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி வாழும்போது அவர்களுக்குள் அனைத்து வகையான உறவுகளும் நடைபெறுகிறது. ஆனால் திடீரென அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டால் ஆண் நண்பர்கள் மீது பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து விட்டது.
16 ஆண்டுகள் லிவ் இன் உறவில் வாழ்ந்த ஒரு கல்லூரி பேராசிரியை இப்போது தன்னுடன் வாழ்ந்த வங்கி மேலாளர் திருமண ஆசை காட்டி தன்னுடன் பாலியல் உறவு வைத்து தன்னை ஏமாற்றி விட்டார் என்று கூறி போலீஸில் புகார் செய்துள்ளார். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வங்கி மேலாளருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தனர்.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ''இருவரும் நன்கு படித்தவர்கள். விருப்பத்தின் பேரில் இருவரும் உறவு வைத்துக்கொண்டுள்ளனர். இருவரும் வேறு வேறு நகரங்களில் பணியாற்றியபோது கூட ஒருவர் இடத்திற்கு மற்றொருவர் சென்றுள்ளனர். இருவரும் 16 ஆண்டுகள் லிவ் இன் உறவில் வாழ்ந்துள்ளனர். 16 ஆண்டுகளாக புகார்தாரர் மேல் முறையீட்டாளரின் கோரிக்கைக்கு இணங்கி இருக்கிறார். 16 ஆண்டுகளாக திருமண ஆசை காட்டி உறவு வைத்துக்கொண்டார் என்று கூறுவதை நம்பும் படியாக இல்லை. நீண்ட கால உறவில் இருவருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
16 ஆண்டுகளாக இருவரும் பாலியல் உறவில் இருந்தனர் என்பதில் இருந்து அவர்களுக்கு இடையிலான உறவில் எந்த கட்டாயமோ அல்லது நிர்ப்பந்தமோ இருக்கவில்லை என்று முடிவு செய்யமுடிகிறது. திருமண வாக்குறுதியின் பேரில் மட்டுமே பாலியல் உறவுகள் தொடர்ந்ததாகக் கூறப்படும் இத்தகைய கூற்றுகள், நீண்ட கால உறவு காரணமாக குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மையை இழக்கின்றன. திருமண வாக்குறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அந்த உறவில் நீண்ட காலம் இருக்கும் புகார்தாரரின் கூற்றை நம்பும்படியாக இல்லை. இருவரும் நீண்ட காலம் லிவ் இன் உறவில் வாழ்ந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்துக்கொண்டதாக ஒரு பெண் பாலியல் புகார் கூறமுடியாது.
தம்பதிகள் நீண்ட காலம் ஒன்றாக சேர்ந்து வாழும்போது ஆணுக்கு எதிராக பெண் பாலியல் வன்கொடுமை புகார் செய்ய முடியாது. இது போன்ற சூழ்நிலையில் பாலியல் உறவுகளுக்கு பின்னால் திருமண வாக்குறுதி மட்டும் காரணமாக இருந்தது என்பதை தீர்மானிப்பது கடினம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
