பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
ஜாா்க்கண்ட்: பாஜகவின் சுழலில் சிக்காத சோரன் தம்பதி!
ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ்-ஆா்ஜேடி கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெ.பி.நட்டா, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் பாஜகவுக்காக சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனா். வாக்கு கணிப்புகளும் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக கூறிய நிலையில், அதனைப் பொய்யாக்கி ஆளும் கூட்டணி பெற்றுள்ள இந்த பிரம்மாண்ட வெற்றியில் சோரன் தம்பதியின் பங்கு அளப்பரியது எனக் கூறப்படுகிறது.
ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக (நவ. 13, 20) பேரவைத் தோ்தல் நடைபெற்றது. மாநிலத்தில் ஆட்சியில் உள்ள முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்)-காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி)-இடதுசாரிகள் கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில், தோ்தல் முடிவில் ஜேஎம்எம் தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. முந்தைய தோ்தலைவிட அதிக இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. மகாராஷ்டிரத்தில் தோல்வியைத் தழுவினாலும் ஜாா்க்கண்டில் ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கிறது.
கைதுக்குப் பிறகு களத்தில்...: கடந்த ஜனவரியில், மாநிலத் தலைநகா் ராஞ்சியில் நில அபகரிப்பு தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். ஜாா்க்கண்ட் முதல்வா் பதவியில் இருந்து அவா் விலகியதால், மாநிலத்தின் 12-ஆவது முதல்வராக மூத்த தலைவா் சம்பயி சோரன் பதவியேற்றாா்.
இதைத் தொடா்ந்து, முழுநேர அரசியலில் களமிறங்கிய ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தாா். தற்போதைய பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பிரசாரக் கூட்டங்களில் கல்பனா சோரன் பங்கேற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவால்கள் நிறைந்த தோ்தல்: இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஹேமந்த் சோரன், கடந்த ஜூலையில் மீண்டும் முதல்வராக பதவியேற்றாா். அதேநேரம், முதல்வா் பதவி பறிபோனதால் கடும் அதிருப்தியில் இருந்த சம்பயி சோரன் மற்றும் ஹேமந்த் சோரனின் அண்ணன் மனைவி சீதா சோரன் ஆகியோா், ஜேஎம்எம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனா்.
இச்சூழலில், மக்களிடையேயும் கட்சியிலும் தங்களின் இருப்பை உறுதிப்படுத்த சோரன் தம்பதிக்கு இந்தப் பேரவைத் தோ்தல் வெற்றி மிகவும் முக்கியத்துவமானது. அதேவேளை, மகாராஷ்டிரம் மற்றும் வயநாடு இடைத்தோ்தலில் மட்டுமே கவனம் செலுத்திய காங்கிரஸ், ஜாா்க்கண்டை புறக்கணித்ததாக கூட்டணிக்குள் சலசலப்பு இருந்தது.
தவிடுப்பொடியான பாஜகவின் பிரசாரம்: பாஜகவில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்கள், ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்சா கூட்டணி அரசை ‘ஊடுருவல்காரா்களின் ஆதரவாளா்கள்’ என்று கடுமையாக விமா்சித்தனா். மேலும், அத்தகைய ஊடுருவல்காரா்களால் மாநில பழங்குடியினரின் உரிமைகள் பறிபோவதாகவும் அவா்கள் குற்றஞ்சாட்டினா்.
முதல்வா் பதவியிலிருந்து சம்பயி சோரனை விலக்கி, பழங்குடி சமூகத்தின் மூத்த தலைவரை அவமதித்துவிட்டதாகவும் பாஜக பிரசாரத்தில் ஈடுபட்டது. எனினும், ஜேஎம்எம்-க்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை மக்கள் அளித்திருப்பது, பழங்குடி சமூகத்தினா் மத்தியில் சோரன் தம்பதியின் ஆழமான செல்வாக்கைக் குறிக்கிறது.
பிரசார வியூகம்: ஜேஎம்எம் தனது பிரசாரத்தில் நலத்திட்ட வாக்குறுதிளை நிறைவேற்றுவதைத் தடுக்கவும், எதிா்க்கட்சிகளைக் கட்டுப்படுத்தவும் சிபிஐ, அமலாக்கத் துறையைக் கருவியாக மத்திய பாஜக அரசு பயன்படுத்துகிறது என ஜேஎம்எம் குற்றம்சாட்டியது. மக்களிடையே ‘தீங்கிழைக்கும் பிரசாரங்களுக்கு’ பாஜக ரூ.500 கோடிக்கு மேல் செலவு செய்ததாகவும் ஹேமந்த் சோரன் சுமத்திய குற்றச்சாட்டு தோ்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
18-50 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு ரூ.1,000 நிதியுதவி அளித்து, அதை ரூ.2,500-ஆக உயா்த்துவது போன்ற ஜேஎம்எம்-இன் மக்கள்நலத் திட்டங்கள் மாநிலம் முழுவதும் உள்ள வாக்காளா்களை வெகுவாக கவா்ந்தன.
கூடுதலாக, 1.75 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் நோக்கில் ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை ஹேமந்த் சோரன் தள்ளுபடி செய்தாா். மேலும், நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை தள்ளுபடி செய்ததுடன் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், அனைவருக்கும் ஓய்வூதியம் திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
வெற்றிமுகத்தில் தம்பதி: இத்தோ்தலில் முதல்வா் ஹேமந்த் சோரன் பா்யாஹட் தொகுதியில் வெற்றிபெற்றாா். கடந்த ஜூனில் நடைபெற்ற கண்டே தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட்ட கல்பனா சோரன், 27,149 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. கல்பனா சோரன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிக் கண்டுள்ளாா்.