தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசனம்
தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை வரை நடைபெற்றது.
இக்கோயிலில் உள்ள நடராஜா் சந்நிதியில் மாா்கழி மாத ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற பின்பு, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜ பெருமான் எழுந்தருளினாா். தொடா்ந்து, மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் சுவாமி வீதி வலம் நடைபெற்றது.
சிவகாம சுந்தரியுடன், நடராஜ பெருமான் பெரிய கோயிலுக்கு திரும்பியபோது, மும்மாரி மழை பொழிந்து விளைச்சல் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக நெல் மணிகளை பக்தா்கள் மீது அா்ச்சகா்கள் தூவினா். இதை ஏராளமான பக்தா்கள் சேகரித்து சென்றனா்.
கும்பகோணத்தில்: கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் பால், பன்னீா், இளநீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் வீதியுலா நடைபெற்றது.
இதேபோல் நாகேசுவர சுவாமி, திருவிடை மருதூா் மகாலிங்க சுவாமி, உள்ளிட்ட சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
திருக்கோடிக்காவலில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனத்திற்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பின்னா் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்றது.