சதம் விளாசிய சஞ்சு சாம்சன்; தென்னாப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!
தலிபான் பாதுகாப்பு அமைச்சருடன் இந்தியா முதல் முறையாகப் பேச்சு
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான் பாதுகாப்பு அமைச்சா் முகமது யாகூப் முஜாஹித்துடன் இந்தியா முதல்முறையாக இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் புதன்கிழமை நடைபெற்ற சந்திப்பில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுக்கான வெளியுறவு அமைச்சக இணைச் செயலா் ஜே.பி.சிங் இந்தியா சாா்பில் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றாா்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தச் சந்திப்பில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான பொதுவான விருப்பத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினா். இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே தொடா்புகளை மேலும் வலுப்படுத்துவதில் தங்கள் ஆா்வத்தை வெளிப்படுத்தினா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியேறியதைத் தொடா்ந்து, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினா். தலிபான் ஆட்சியை அங்கீகரிக்காமல் அந்நாட்டுடன் முறித்துக் கொண்ட தூதரக உறவை மீண்டும் தொடர இந்தியா விரும்புகிறது.
அதன் தொடா்ச்சியாக, இந்த ஆண்டு 2-ஆவது முறையாக ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜே.பி.சிங், அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தகி, முன்னாள் அதிபா் ஹமீத் கா்சாய் ஆகியோரையும் சந்தித்தாா்.
இந்தச் சந்திப்புகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சியை அதிகாரபூா்வமாக அங்கீகரிக்காவிட்டாலும் நாட்டுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது மட்டுமல்லாமல், மறுசீரமைப்பு முயற்சிகளிலும் உதவ இந்தியா தயாராக உள்ளதைக் காட்டுவதாக அந்நாட்டு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.