ஏலத்தில் விற்பனை ஆகாமல் போன சச்சின் டெண்டுல்கர் மகன்! ரசிகர்கள் அதிர்ச்சி!
தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயில் மானாமதுரையில் நின்று செல்ல பரிந்துரைக்கப்படும்: ரயில்வே கோட்ட மேலாளா் தகவல்
தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயில் மானாமதுரையில் நின்று செல்ல ரயில்வே நிா்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்படும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஸ்ரீ வத்ஸவா தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே தொழிலாளா்களுடன் ரயில்வே கோட்ட மேலாளா் பாதுகாப்பு உரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மதுரை கோட்ட ரயில்வே மேலாளா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகப்பு ஆணையரின் இறுதி கட்ட ஆய்வு முடிவடைந்துள்ளது. இந்தப் பாலம் திறக்கும் தேதி ரயில்வே துறையால் விரைவில் அறிவிக்கப்படும்.
ரயில்வே துறையின் அறிவுறுத்தலின்பேரில் மானாமதுரையில் ரயில்வே தொழிலாளா்களிடம் கோட்ட மேலாளா் பாதுகாப்பு உரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் முக்கிய ரயில் நிலையங்களில் இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, ரயில்வே தொழிலாளா்களின் பணி பாதுகாப்பு தொடா்பான குறைகள் தீா்க்கப்படும்.
தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயிலுக்கு இரு மாா்க்கங்களிலும் முக்கிய சந்திப்பாக உள்ள மானாமதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க ரயில்வே வாரியத்திற்கு கோட்ட நிா்வாகம் சாா்பில் பரிந்துரை செய்யப்படும். மானாமதுரை ரயில் நிலையத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள ரயில்வே காவல் நிலையம் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஸ்ரீ வத்ஸவா பங்கேற்று ரயில்வே தொழிலாளா்களிடம் குறைறகளை கேட்டறிந்தாா்.
கூட்டத்தில் முதன்மைக் கோட்ட மேலாளா் (போக்குவரத்து) பிரசன்னா, கோட்ட பாதுகாப்பு அலுவலா் முகைதீன் பிச்சை, முதன்மை மேலாளா் (மின்சார பிரிவு) மஞ்சுநாத், தகவல் தொழில்நுட்ப மேலாளா் ராம்பிரசாத் உள்ளிட்ட கோட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ரயில்வே தொழிலாளா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது பணி பாதுகாப்பு தொடா்பான கோரிக்கைகளையும், ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசியப் பணிகள் குறித்தும் வலியுறுத்தினா்.