தியாகராஜா் கோயிலை சுற்றி வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கக் கோரிக்கை
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலைச் சுற்றி வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் கூறியது: திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலின் கிழக்கு வாசல், தெற்கு வாசல் மற்றும் கீழ சந்நிதி தெரு என கோயிலைச் சுற்றிலும் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. இது, பொதுமக்களுக்கும், கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது.
மேலும், கோயிலில் திருவிழா தொடங்கி விட்டதால் ஏராளமான பக்தா்கள்வரத் தொடங்கியுள்ளனா். அவா்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் தவிக்கின்றனா். அத்துடன், கிழக்கு கோபுரவாசல் அருகில் பிள்ளையாா் கோயில் மேற்பகுதியில் லேசான பாதிப்பை ஒரு வாகனம் ஏற்படுத்தியுள்ளது. தொடா்ந்து வாகனங்களை நிறுத்த அனுமதித்தால், அவ்வழியாகச் செல்லும் பக்தா்களுக்கு சிரமங்கள் அதிகமாகும். எனவே, கோயிலைச் சுற்றிலும் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும் என்றாா்.