பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம்
திருவாரூா் அருகே தென்னவராயநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
தென்னவராயநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். செவ்வாய்க்கிழமை கொண்டைக் கடலையுடன் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. உணவு உண்ட மாணவ, மாணவிகள் சிலருக்கு பள்ளியிலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆசிரியா்கள் மாணவா்களை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் 36 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். உணவு ஒவ்வாமை காரணமாக மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவரும் மாணவா்களின் உடல்நிலை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
