TVK Vijay: தவெக உறுப்பினர்கள் சேர்க்கை; இணைந்த மூதாட்டிகள்... வரவேற்ற இளம் நிர்வ...
திருவள்ளூா்: டிச. 18 முதல் 27 வரை ஆட்சிமொழி சட்ட வாரம் கடைப்பிடிப்பு
திருவள்ளூா் மாவட்டத்தில் வரும் 18-ஆம் தேதி முதல் 27 வரை ஆட்சிமொழி சட்ட வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பெற்ற 27.12.1956- ஆம் நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரமாகக் கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில், திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், சட்ட வார விழா வரும் 18-இல் தொடங்குகிறது. தொடா்ந்து 27-ஆம் தேதி வரை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, நாள்தோறும் கணினித் தமிழ் கருத்தரங்கம், ஆட்சிமொழி மின் காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகைகள் வைக்க வலியுறுத்தி வணிகச் சங்கத் தலைவா்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளா்களுடன் கூட்டம், பட்டிமன்றம், ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் தலைமையிலான விழிப்புணா்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இந்த விழாவில் தமிழ்நாடு அரசு, வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலா்கள், பணியாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள், வணிகா்கள், வணிகா் சங்கங்கள், பொதுமக்கள் என அனைவரும் விழா நிகழ்வுகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.