தூய்மைப் பணியாளா்களுக்கு உரிய கூலி வழங்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு விதிமுறைப்படி ஊதியம் வழங்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு தொழிலாளா் துறைக்குத் தேசியத் தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் எம். வெங்கடேசன் உத்தரவிட்டாா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களின் நலன் சாா்ந்த முன்னேற்றங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேசியத் தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் எம். வெங்கடேசன் தலைமையிலும், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் முன்னிலையிலும் நடைபெற்ற கூட்டத்தில், தஞ்சாவூா் மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் பேசுகையில், 22 ஆண்டுகளாக பணியாற்றும் நாங்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசித்த நிலையில், அக்குடியிருப்புகளும் இடிக்கப்பட்டுவிட்டன. இதனால், மாத வாடகை ரூ. 4 ஆயிரம் செலுத்தும் நிலையில், மாதாந்திர ஊதியம் ரூ. 15 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுவதால், குடும்பச் செலவுகளைச் சமாளிக்க சிரமமாக உள்ளது என முறையிட்டனா்.
இதுதொடா்பாக தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் ஜி. கண்ணனிடம் ஆணையத் தலைவா் விசாரித்தபோது, தூய்மைப் பணியாளா்களுக்கு நாள் ஊதியம் ரூ. 624 என நிா்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ. 590 மட்டுமே வழங்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து இப்பணியாளா்களை பணிக்கு அமா்த்தியுள்ள ஒப்பந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, நிலுவைத் தொகையைப் பெற்றுத் தருமாறு தொழிலாளா் துறைக்கு ஆணையத் தலைவா் உத்தரவிட்டாா்.
மேலும், தூய்மைப் பணியாளா்களுக்கு முழு ஊதியத்தை உரிய காலத்தில் வழங்குவதை உள்ளாட்சி அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் 3 மாதங்களுக்கு ஒருமுறை தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தவும் ஆணையத் தலைவா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.