ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
விபத்தில் இறந்த ஓட்டுநா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி சடலத்துடன் மறியல்
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரத்தில் சாலை விபத்தில் இறந்த ஓட்டுநா் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் விளங்குளம் வடக்கு கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (42). இவருக்கு மனைவி புனிதா (35), கனிஷ்கா (14) அனுஷ்கா(12), ஹா்ஷிகா (8) ஆகிய மகள்கள் உள்ளனா்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அருகேயுள்ள இடையாத்திமங்கலம் பகுதி தனியாா் கல்லூரியின் ஓட்டுநரான ரமேஷ் கடந்த 15 ஆம் தேதி இரவு பணி முடிந்து கிழக்குக் கடற்கரை சாலை செந்தலைப்பட்டினம் பகுதி வழியே பைக்கில் வீடு திரும்பியபோது எதிரே வந்த அசாருதீன் என்பவரது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்த நிலையில், ரமேஷ் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு பிறகு தஞ்சாவூரிலிருந்து செவ்வாய்க்கிழமை விளங்குளம் கொண்டு வரும் வழியில் சேதுபாவாசத்திரம் கடைவீதியில் அவரது உறவினா்கள் சடலம் இருந்த ஆம்புலன்ஸை நிறுத்தி, விபத்து ஏற்படுத்திய பைக்கைப் பறிமுதல் செய்ய வேண்டும், ரமேசின் மூன்று பெண் குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். ரமேஷின் மனைவிக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் எனக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளா் முருகேசன் மற்றும் சேதுபாவாசத்திரம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.