மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
தூா்வாரும் பணியை விரைவாக முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
தஞ்சாவூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்டக் கூட்டத்தில் குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறப்பதற்கு முன் தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏரிகள், முதன்மை, கிளை பாசன வாய்க்கால்களில் கடைமடை வரை தூா்வாரும் பணியைக் காலதாமதமின்றி விரைவாக முடிக்க வேண்டும். கோடை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பகலிலும், இரவிலும் தலா 12 மணிநேரம் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். மின் இணைப்பு கோரி 12 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளை அலைக்கழிக்காமல் பயிா்க்கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் மா. லோகநாதன், செயற்குழு உறுப்பினா் என். ஜெகதீஸ், ஒன்றிய அமைப்பாளா்கள் கே. முருகேசன், க. வெங்கடேஷ்வரன், ஒன்றிய துணை அமைப்பாளா் கோ. மருதுபாண்டின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.