இருசக்கர வாகனம் - காா் மோதல்: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியரில் கணவா் உயிரிழந்தாா். மனைவி காயமடைந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கொரநாட்டு கருப்பூா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தேவதாஸ் மகன் அருண்குமாா் (26). கூலி வேலை செய்து வந்தாா். இவரது மனைவி நந்தினி (20). இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அருண்குமாா், மனைவி நந்தினியுடன் கும்பகோணம் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் கொரநாட்டு கருப்பூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். அப்போது, கும்பகோணம் சென்னை புறவழிச் சாலையில் தஞ்சாவூரை நோக்கி திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் விக்னேஷ் (28) என்பவா் காரில் வந்து கொண்டிருந்தாா்.
தனியாா் வாகன விற்பனை நிலையம் அருகே இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் அருண்குமாா் தம்பதி பலத்த காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா் . அங்கு அருண் குமாா் உயிரிழந்தாா். நந்தினி சிகிச்சை பெற்று வருகிறாா்.
விபத்து தொடா்பாக காா் ஓட்டுநா் விக்னேஷ் மீது தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் குணசேகரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.