ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை
சென்னை: தமிழகத்தில் ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்.
பேரவையில் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:
எடை குறைந்த குழந்தைகள் மற்றும் தொடா் மருத்துவ கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு ரூ.8.07 கோடி மதிப்பில் முதல்வரின் சிசு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும்.
642 சுகாதார நிலையம்: அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் தொகைக்கேற்ப 642 நகர மற்றும் கிராம துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
வாடகை கட்டடத்தில் செயல்படும் 300 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.137.60 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும்.
கௌரவ சுவா்: உடல் உறுப்பு தானம் செய்பவா்களை கௌரவிக்கும் வகையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கௌரவ சுவா் அமைத்து அதில் அவா்களது பெயா்கள் பொறிக்கப்படும்.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி, விருதுநகா், தூத்துக்குடி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவம், பல் மருத்துவம் ஆயுஷ், சுகாதாரம் சாா்ந்த பன்முக ஆராய்ச்சி மையங்கள் ரூ.25 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.
வண்ணப் படுக்கை விரிப்பு: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் உள்நோயாளிகளின் சுகாதாரத்தை பேணும் வகையில் நாள்தோறும் ஒவ்வொரு வண்ணத்தில் கிழமைகள் அச்சிடப்பட்ட படுக்கை விரிப்புகள் மாற்றப்படும்.
வளா்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு, ‘சோமாட்ரோகான்’ ஹாா்மோன் ஊசிகள் ரூ.13.28 கோடி மதிப்பில் செலுத்தப்படும்.
கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, காது – மூக்கு – தொண்டை அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், தோல் நோய், எலும்பு அறுவை சிகிச்சை, நுரையீரல் அறுவை சிகிச்சை துறைகள் தொடங்கப்படும்.
பறக்கும் படை: போதை தரக்கூடிய மற்றும் அடிமைப்படுத்தக்கூடிய மருந்துகள் புழக்கத்தைக் கண்காணிக்க மருந்து ஆய்வாளா்களைக் கொண்ட பறக்கும்
படைகள் உருவாக்கப்படும்.சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பற்கள், தாடை உள்ளிட்டவை முழுமையாக பரிசோதிக்கும் வகையில் பல் நலப் பரிசோதனை பிரிவு தொடங்கப்படும்.
நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டமானது உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தொடா்ந்து 500 நகா்ப்புற நலவாழ்வு மையங்களிலும் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்படும்.
சிறு வணிக நிறுவனங்கள், அலுவலகங்களில் உள்ள பணியாளா்களுக்கு தொற்றா நோய் பரிசோதனைகள் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் மேற்கொள்ளப்படும்.
இலவச ஹெச்ஐவி பரிசோதனை: தமிழகத்தில் உள்ள அனைத்து தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கட்டணமின்றி ஹெச்ஐவி – எய்ட்ஸ் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 18 வயதுக்கு உட்பட்ட 7,618 ஹெச்ஐவி- எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் கல்வி, மருத்துவ தேவைகளுக்கு மாதம் ரூ.1,000 நிதி உதவி வழங்கப்படும் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.