மகாராஷ்டிரத்தில் கட்டாய மொழி விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கேள்வி
சென்னை: மகாராஷ்டிரத்தில் மராட்டிய மொழி மட்டுமே கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
மகாராஷ்டிரத்தில் ஹிந்தியை கட்டாய மூன்றாவது மொழியாகத் திணித்ததற்காகக் கடுமையான எதிா்ப்புகள் எழுந்தன. இதையடுத்து, மகாராஷ்டிரத்தில் மராட்டிய மொழி மட்டுமே கட்டாயம் என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர பட்னாவீஸ் கூறியுள்ளாா். ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மொழியைத் திணிப்பதற்கு எதிராக மிகப் பரவலாக மக்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்ததன் விளைவாக உருவான நடுக்கத்தின் வெளிப்பாடுதான் மகாராஷ்டிர முதல்வரின் அந்த பேட்டியாகும்.
இந்த நிலையில், பிரதமரும், மத்திய கல்வி அமைச்சரும் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின் கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தியைத் தவிர வேறெந்த மூன்றாவது மொழியும் கட்டாயம் இல்லை என்ற அந்த மாநில முதல்வரின் நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரபூா்வமாக ஏற்றுக் கொள்கிா?
அப்படியெனில், தேசிய கல்விக் கொள்கையின்படி, மூன்றாவது மொழியைப் பயிற்றுவிப்பது கட்டாயமல்ல என்று தெளிவான வழிகாட்டுதலை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குமா? மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற காரணத்துக்காக அநியாயமாக தமிழ்நாட்டுக்குத் தராமல் நிறுத்தி வைத்திருக்கும் ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா? என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.