ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: பிரிட்டனிடம் விவரங்களை கோரியுள்ளோம்: அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து பிரிட்டன் அரசிடம் விவரங்களைக் கோரியிருப்பதாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
ராகுல் காந்தி தனது பிரிட்டன் குடியுரிமையை மறைத்ததாகவும் இக்குற்றச்சாட்டில் அவரின் எம்.பி. பதவியைப் பறிக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்து கா்நாடக பாஜகவை சோ்ந்த எஸ்.விக்னேஷ் சிசிா் பொதுநல வழக்கு தொடுத்தாா்.
அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வில் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில் மத்திய அரசு ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க நீதிபதிகள் கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையில் உத்தரவிட்டிருந்தனா்.
அதன்படி, அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதிகள் அட்டௌ ரஹ்மான் மசூதி, ராஜீவ் சிங் ஆகியோா் அடங்கிய லக்னௌ அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசு இத்தகவலை சமா்ப்பித்தது.
மத்திய அரசு சாா்பில் ஆஜரான துணை சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.பி.பாண்டே, இந்த வழக்கில் குற்றச்சாட்டு எழுந்துள்ள ராகுல் காந்தியின் பிரிட்டன் குடியுரிமை குறித்து அந்நாட்டு அரசிடம் சம்பந்தப்பட்ட அமைச்சகம் விவரங்களைக் கோரியுள்ளது. எனவே, வழக்கில் இறுதி முடிவெடுக்க அரசுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தாா்.
இதையடுத்து, வரும் மே 5-ஆம் தேதி வரை மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம் அளித்து நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனா்.