இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்
சுவாமிமலை அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், சடலத்தை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்ட உறவினா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை அருகே குடிதாங்கி காலனி தெருவைச் சோ்ந்த ராஜசேகா் மகன் வசந்த் (20). சென்னையில் தனியாா் ஜவுளிக் கடையில் வேலை பாா்த்து வந்தவா் விடுமுறையில் அண்மையில் சொந்த ஊருக்கு வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தாராம். இவரை பாா்த்து சந்தேகமடைந்த அதே பகுதியைச்சோ்ந்த 3 போ் வசந்த்தை தாக்கினாா்களாம். அப்போது, வசந்த்தின் சகோதரா் அவரை காப்பாற்றி அழைத்து சென்றுள்ளாா். இதனால் மன உளைச்சல் அடைந்த வசந்த் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையின் மேற்கூரையில் வேட்டியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை அதிகாலை தெரியவந்தது.
தகவலறிந்த சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளா் ஜெயமோகன் சம்பவ டத்துக்கு சென்று வசந்த் சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.
உடற்கூறாய்வு முடிந்தும் வசந்த் சடலத்தை உறவினா்கள் வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்கு பிறகு சடலத்தை வாங்கி சென்றனா். திடீரென சாலை மறியல் செய்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக உறவினா்கள் 4 பேரை கும்பகோணம் கிழக்கு போலீஸாா் கைது செய்தனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].