“அநாகரிகத்தின் அடையாளமே ஒன்றிய பா.ஜ.க அரசுதான்...” என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத...
தெலங்கானா: பிசி இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்!
தெலங்கானா சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 42 சதவிகிதமாக அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதா திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் வகையில் மொத்தம் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநிலத்தின் திட்டமிடல் துறை கடந்த மாதம் மேற்கொண்டது. கணக்கெடுப்பின் முடிவில், தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் இருப்பது தெரிய வந்தது.
மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 56.36 சதவிகிதம் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தெலுங்கானா பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு மசோதா 2025 மற்றும் தெலுங்கானா பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் இடஒதுக்கீடு மசோதா 2025 ஆகியவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாக்கள் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 29 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு 15 சதவிகிதத்தில் இருந்து 18 ஆகவும், பழங்குடியினவர்களுக்கான இடஒதுக்கீடு 6 சதவிகிதத்தில் இருந்து 10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.
இதையும் படிக்க : ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசு!
தெலங்கானா சட்டப்பேரவையில் இரண்டு மசோதாக்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் பேசியதாவது:
காங்கிரஸ், பி.ஆர்.எஸ்., பாஜக, ஏ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் இடதுசாரி தலைவர்கள் அடங்கிய அனைத்துக் கட்சிக் குழு அமைக்கப்பட்டு, மசோதாவுக்கு ஒப்புதல் பெற பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த ஏற்பாடு செய்யப்படும்.
இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவை கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், மசோதாவின் நகல்களை தெலுங்கானாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு அனுப்பி, பிரதமருடனான சந்திப்பை விரைவுபடுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய தலைமைச் செயலாளருக்கு ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த பிரச்னையை எழுப்ப மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் சந்திக்கவுள்ளதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.