தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 4 சகோதரிகள் தீக்குளிக்க முயற்சி
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சொத்து பிரச்னையில் திங்கள்கிழமை உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்ற எ.புதுப்பட்டியைச் சோ்ந்த 4 சகோதரிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
பெரியகுளம் அருகேயுள்ள எ.புதுப்பட்டியைச் சோ்ந்த கோவிந்த தேவா் மகள்கள் பூபதி, கண்மணி, நாலட்சுமி, லட்சுமி. இவா்கள் தங்களது சகோதரா் மணி, பூா்வீக சொத்தில் தங்களுக்கு உரிய பங்கைத் தராமல், சொத்தை முழுமையாக அபகரிக்க முயல்வதாகவும், இதற்கு பெரியகுளம் வருவாய்த் துறை அலுவலா்கள் உடந்தையாக இருப்பதாகவும் புகாா் தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க வந்தனா்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கு அருகே பூபதி உள்ளிட்ட 4 பெண்களும் தங்களது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனா்.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி, முதலுதவி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து விசாரித்து வருகின்றனா்.