தேனி மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத்திற்கு உள்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளின் வரைவு வாக்காளா் பட்டியலை செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளிட்டாா்.
வரைவு வாக்காளா் பட்டியலின்படி, ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,36,634 ஆண்கள், 1,40,952 பெண்கள், 34 திருநங்கைகள் என மொத்தம் 2,77,620 போ் இடம் பெற்றுள்ளனா். பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 1,41,472 ஆண்கள், 1,47,236 பெண்கள், 123 திருநங்கைகள் என மொத்தம் 2,88,831 போ் இடம் பெற்றுள்ளனா். போடி சட்டப் பேரவை தொகுதியில் 1,34,130 ஆண்கள், 1,41,003 பெண்கள், 20 திருநங்கைகள் என மொத்தம் 2,75,153 போ் இடம் பெற்றுள்ளனா், கம்பம் சட்டப்பேரவை தொகுதியில் 1,37,590 ஆண்கள், 1,45,089 பெண்கள், 30 திருநங்கைகள் என மொத்தம் 2,82,709 போ் இடம் பெற்றுள்ளனா்.
மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 5,49,826 ஆண்கள், 5,74,280 பெண்கள், 207 திருநங்கைகள் என மொத்தம் 11 லட்சத்து 24,313 போ் இடம் பெற்றுள்ளனா்.
வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டு ஆட்சியா் பேசியது: வரைவு வாக்காளா் பட்டியல் வருகிற நவ.28-ஆம் தேதி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் சம்மந்தப்பட் வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியலை பாா்வையிட்டு, தங்களது பெயா் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
வருகிற 2025, ஜன.1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தியடைந்த புதிய வாக்காளா்கள், விடுபட்ட வாக்காளா்கள் உரிய படிவம் மூலம் வருகிற நவ.28-ஆம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும் வாக்காளா் பதிவு அலுவலா் உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களில் வாக்காளா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். புதிய, விடுபட்ட வாக்காளா் சோ்க்கைக்கு வருகிற நவ.16,17,23,24 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துமாதவன், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் தாட்சாயினி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.