இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
நடப்பு நிதியாண்டில் ரூ.51,463 கோடி கூடுதல் செலவினம்: நாடாளுமன்றம் ஒப்புதல்
நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் ரூ.51,463 கோடி கூடுதல் செலவினங்களை உள்ளடக்கிய துணை மானியக் கோரிக்கைகள் மற்றும் 2025-26-ஆம் ஆண்டுக்கான மணிப்பூா் மாநில பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
இரண்டாவது தொகுதி துணை மானியக் கோரிக்கைகளின்படி, நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.6.78 லட்சம் கோடிக்கு மேல் ஆகும். இதில் ரூ.6.27 லட்சம் கோடி சேமிப்பு மற்றும் ரசீதுகளால் ஈடுசெய்யப்படும். அதன்படி, கூடுதல் செலவினம் ரூ.51,462.86 கோடியாக இருக்கும். இதற்கான துணை மானியக் கோரிக்கைகள் மற்றும் மணிப்பூா் மாநில பட்ஜெட்டுக்கு மக்களவை கடந்த 11-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
மாநிலங்களவையாலும் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்ட மணிப்பூா் மாநில பட்ஜெட்டில் அந்த மாநிலத்தின் மொத்த வருவாய் ரூ.35,368 கோடியாக உள்ளது. மொத்த செலவு ரூ.35,104 கோடி, சொந்த வரி சுமாா் ரூ.2,634 கோடி மற்றும் வரி அல்லாத வருவாய் சுமாா் ரூ.400 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று, 2021-22-ஆம் நிதியாண்டின் ரூ.1,291 கோடி மதிப்பிலான கூடுதல் மானியக் கோரிக்கைகளுக்கும், 2024-25-ஆம் நிதியாண்டுக்கு மணிப்பூருக்கான ரூ.1,861 கோடி துணை மானியக் கோரிக்கைகளுக்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சியின்கீழ் உள்ள வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூா் மாநில சட்டப்பேரவையின் அதிகாரங்கள் நாடாளுமன்றத்தால் அல்லது அதன் அதிகாரத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநிலங்களவை அமா்வில் 2025-ஆம் ஆண்டு ஒதுக்கீட்டு மசோதா, 2025-ஆம் ஆண்டு ஒதுக்கீட்டு (எண். 2) மசோதா, 2025-ஆம் ஆண்டு மணிப்பூா் ஒதுக்கீட்டு (கணக்கு வாக்கெடுப்பு ) மசோதா, 2025-ஆம் ஆண்டு மணிப்பூா் ஒதுக்கீட்டு மசோதா ஆகிய 4 மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்றது.
விவாதத்துக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசிய பிறகு, அந்த மசோதாக்கள் மக்களவைக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன.