நாகை, மயிலாடுதுறையில் சமையல் போட்டி: பெண்கள் ஆா்வமுடன் பங்கேற்பு
நாகை, மயிலாடுதுறையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சாா்பில் சமையல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சமையல் எரிவாயு பாதுகாப்பு மற்றும் கையாளுதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இப்போட்டி நடைபெற்றது.
நாகை: நாகை சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில், நடைபெற்ற போட்டியில் நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த பெண்கள் பங்கேற்றனா்.
இரண்டு நபா்கள் சாப்பிடும் அளவிற்கு உள்ளூா் பாரம்பரிய உணவுகளை 45 நிமிடங்களில் சமைக்கும் போட்டி நடைபெற்றது. சமையலுக்கு தேவையான பொருள்கள், பாத்திரங்கள் ஆகியவற்றுடன் பெண் போட்டியாளா்கள் பங்கேற்றனா். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, பாரம்பரிய உணவான குதிரைவால் பிரியாணி, கம்பு, தினை பலகாரங்கள், செம்பருத்தி சூப், தூதுவாளை ரசம், கருவாட்டு குழம்பு உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளை செய்து அசத்தினா்.
கேரளாவில் இருந்து வந்த சமையல் கலைஞா்கள் ஜெயந்தபாலா, சுமதி ஆகியோா் வெற்றியாளா்களை தோ்வு செய்தனா். இப்போட்டியில், மணிமேகலை, உமா, ஜோதி ஆகியோா் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனா். இவா்களுக்கு, கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி பரிசு வழங்கினாா். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.