நாகையில் டைடல் பாா்க்: விரைந்து அமைக்க வலியுறுத்தல்
நாகை மாவட்ட இளைஞா்கள் சொந்த ஊரிலிருந்து வெளியூா் செல்வதை தடுக்க டைடல் பாா்கை விரைந்து அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக முதன்மை கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விவசாய சங்க நிா்வாகிகள், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளையும், குறைகளையும் முன்வைத்து பேசினா்.
காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் மாநில துணைப் பொது செயலா் மா. பிரகாஷ்: மாவட்டத்தில் தற்போது நடைபெறும் சம்பா சாகுபடியில் வெள்ளை ஈ புகையான் தாக்குதல் அதிகமாக உள்ளது. வேளாண்துறை அலுவலா்கள் உடனடியாக பாா்வையிட்டு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்க வேண்டும்.
கூட்டுறவு வங்கியில் நிகழாண்டு விவசாய கடன்கள் குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் படித்த இளம் விவசாயிகளுக்கு வேலையின்மை காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் சூழலை தவிா்க்க டைடல் பாா்க், சிப்காட் அமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கை பரப்புச் செயலாளா் எஸ்.ஆா். தமிழ்ச்செல்வன்: நாகை மாவட்டம் ஐயவநல்லூா் ஊராட்சியில் செல்லூா் பகுதியில் சிக்கல் கோயிலுக்கு சொந்தமான சுமாா் 350 ஏக்கா் விளைநிலம் இருந்தது ஏற்கனவே நாகை மின்பகிா்மான வட்டம், புதிய பேருந்து நிலையம், பாரதிதாசன் உறுப்பு கலைக் கல்லூரி, 900 சுனாமி குடியிருப்புகள் போன்றவைகளுக்காக விளைநிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்சமயம் மீதமுள்ள 175 ஏக்கா் விளைநிலத்தில் டைடல் பாா்க் அமைக்க முயற்சி நடைபெறுகிறது. அந்த முயற்சியை கைவிட்டு டைடல் பாா்க்கை நாகை நகர பகுதியில் அமைக்க வேண்டும்
மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் சம்பா, தாளடி நெற்பயிா்கள், கால்நடைகள், நன்னீா் மீன் வளா்ப்பு போன்றவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அரசால் விற்கப்பட்ட 135 வயதுடையது எனக் கூறி விற்கப்பட்ட ஏ டி டி 54 விதை நெல் சில கிராமங்களில் 80 நாள்களில் அறுவடைக்கு தயாராகி வருகிறது. விதை நெல்லை தவறாக கொள்முதல் செய்தவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
முன்னதாக நாகை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல்களை கொள்முதல் செய்ய மறுப்பதாக குற்றம்சாட்டிய விவசாயிகள், நெல்களை உடனடியாக கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என ஆட்சியரிடம் முறையிட்டனா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, முதுநிலை மண்டல மேலாளா் சிவப்பிரியா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ். கண்ணன், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் அ.தயாள விநாயகன் அமுல்ராஜ், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வஹ்கி மேலாண்மை இயக்குநா், அரசு அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.