நாடாளுமன்றத்தில் முதல்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்!
நாடாளுமன்றத்தில் முதல்முறையாக வாக்கெடுப்புக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் பொருட்டு அதுதொடர்பான இரண்டு மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிக்க | மக்களவையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா தாக்கல்!
சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாக்களை தாக்கல் செய்தார்.
மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முதல் மசோதாவும் யூனியன் பிரதேசங்களுக்கும் அதேநேரத்தில் தேர்தல் நடத்த இரண்டாவது மசோதாவும் வழிவகை செய்யும்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவையில் கூச்சல் ஏற்பட்டது.
இறுதியாக, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்தார்.
இதையடுத்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வழக்கமாக குரல் வாக்கெடுப்பு நடத்தும் நிலையில் இன்று மக்களவையில் முதல்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
எதிர்க்கட்சிகள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு செலுத்த விரும்பாதவர்கள் வாக்குசீட்டுகளில் வாக்களிக்கலாம் என அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
இந்த வாக்கெடுப்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப 269 பேர் ஆதரவாகவும் 149 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.