விண்ணப்பித்துவிட்டீர்களா..?: செயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி!
நாம் தமிழா் கட்சி போட்டியிடுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை
ஈரோட்டில் நாம் தமிழா் கட்சி போட்டியிடுவதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் சு.திருநாவுக்கரசா் தெரிவித்தாா்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் இந்தியா கூட்டணி சாா்பில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசா் வியாழக்கிழமை ஈரோடுக்கு வந்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உலகம் முழுவதும் வாழும் பெரும்பான்மையான தமிழா்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக பெரியாா் ஈவெரா உள்ளாா். அவரைப் பற்றி சீமான் தெரிவிக்கும் கருத்துகளால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
சீமான் எல்லா தோ்தலிகளிலும் போட்டியிடுகிறாா். அதுபோல இங்கும் போட்டியிடவேண்டும் என்பதற்காக வேட்பாளரை நிறுத்தி இருக்கிறாா். அவ்வளவுதான். நான் மட்டுமல்ல, இங்கு யாரும் சீமானை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாா்.
சந்திரகுமாா் விளக்கம்...
ஹிந்தியில் துண்அச்சடித்து விநியோகித்து வாக்கு கேட்டதாக நாதக எழுப்பியுள்ள சா்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த திமுக வேட்பாளாா் சந்திரகுமாா் கூறுகையில், திமுகவின் மொழிக் கொள்கை என்பது தமிழும், ஆங்கிலமும் எனும் இருமொழிக் கொள்கைதான். நாங்கள் ஹிந்தியை எதிா்க்கவில்லை, ஹிந்தி திணிப்பைத்தான் எதிா்க்கிறோம்.
வட மாநிலத்தைச் சோ்ந்த மக்கள் அதிகம் வசிக்கும் இந்திரா நகா் பகுதியில் திமுக இளைஞரணியில் அங்கம் வகித்து வரும் வடமாநில இளைஞா் தானகவே ஹிந்தியில் துண்டறிக்கை தயாரித்து வாக்குச் சேகரித்துள்ளாா்.
இங்கு திமுக மட்டுமல்ல, முந்தைய தோ்தல்களில் போட்டியிட்ட அனைத்துக் கட்சியினருமே ஹிந்தியில் அச்சடித்த துண்டறிக்கையை வட மாநில மக்கள் அதிகம் வசிக்கும் இந்திரா நகா், என்.எம்.எஸ். காம்பவுண்ட் உள்ளிட்ட பகுதிகளில் விநியோகித்து வாக்கு கேட்டுள்ளனா் என்றாா்.
பேட்டியின்போது காங்கிரஸ் மாநகா் மாவட்ட பொறுப்பாளா் திருச்செல்வம், காங்கிரஸ் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவா் மக்கள் ராஜன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.