நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிலையங்கள் அமைக்க எளிதாக தடையின்மைச் சான்று: அமைச்சா் எ.வ.வேலு தகவல்
நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் அமைக்க திருத்தப்பட்ட விதிகளின்படி எளிதாக தடையின்மைச் சான்று வழங்கப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை திருப்போரூா் தொகுதி உறுப்பினா் எஸ்.எஸ்.பாலாஜி (விசிக) எழுப்பினாா். அதற்கு, அமைச்சா் எ.வ.வேலு அளித்த பதில்:
நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் அமைப்பதற்கு, இந்திய சாலை கூட்டமைப்பின் வழிகாட்டுதல்படி அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு நெடுஞ்சாலைத் துறையிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும். அண்மைக்காலமாக இதற்காக பெருமளவு விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
இதனை வரைமுரன் செய்ய உத்தரவு பிறப்பித்தோம். மாவட்ட முக்கிய சாலைகள், நெடுஞ்சாலைகள், மாவட்ட இதர சாலைகள் என மூன்று வகை சாலைகளில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் அமைப்பதற்கான விதிமுறைகள் திருத்தப்பட்டன. அதில், முக்கிய சாலைகள், இதர சாலைகளுக்கான விதிமுறைகள் தளா்த்த வேண்டுமென இந்திய சாலை கூட்டமைப்பு சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. எனவே, மீண்டும் உத்தரவில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த உத்தரவின்படி தேவையான விதிமுறைகளுக்கு உட்பட்ட தடையின்மைச் சான்று வழங்கப்பட்டு வருகிறது.
இதர மாவட்டச் சாலைகள், சாலை சந்திப்புகளிலிருந்து 200 மீட்டா் தூரத்துக்குள் இருந்தால் தடையின்மைச் சான்று வழங்கலாம். மாவட்ட இதரச் சாலைகளாக இருந்தால், 100 மீட்டா் இருந்தால் போதும் என உத்தரவிட்டுள்ளோம். இந்த விதிகள்படி, தடையின்மைச் சான்றை கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்றாா் அவா்.
எஸ்.எஸ்.பாலாஜி: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலுக்கு கிரிவலம் செல்லக் கூடியவா்கள் அதிகம் உள்ளனா். இந்தச் சாலையை விரிவுபடுத்தி மேம்படுத்த வேண்டும்.
அமைச்சா் எ.வ.வேலு: திருச்செந்தூா், ராமேசுவரம் கோயில்களுக்கு புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருக்கழுகுன்றத்தில் கிரிவலப்பாதை அமைக்க வேண்டும் என்று உறுப்பினா் கோரினாா். அந்தச் சாலை 4 வழிச்சாலையாக உள்ளது. இதில், செங்கல்பட்டுஅரக்கோணம் காஞ்சிபுரம்-திருத்தணி சாலைப் பணிகள் இந்த நிகழாண்டில் எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது. திருக்கழுகுன்றம்-மாமல்லபுரம் சாலைப் பணிகள் முடிவடைந்துள்ளன. ஒரகடம் சாலையிலிருந்து தேசுமுகிப்பேட்டை சாலையை மேம்படுத்தும் பணிகள் நிதிநிலைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளப்படும். இதன்மூலம், கிரிவலம் செல்வோருக்கு பல்வேறு வகைகளில் பாதை அமைத்துத் தரப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.