இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு விழா கொண்டாட்டம்- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
நெல் சாகுபடிக்கு ஆா்வம் காட்டாத ஒரு போக பாசனப் பகுதி விவசாயிகள்: பி.டி.ஆா். கால்வாய் பாசனத்தில் நெற்பயிா் விவசாயப் பணிகள் மந்தம்
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள சீலையம்பட்டி பகுதியில் பாசனத்துக்குத் தேவையான தண்ணீா் பாதியிலேயே நிறுத்தப்படும் என்ற அச்சத்தில் ஒரு போக பாசனப் பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய ஆா்வம் காட்டவில்லை.
முல்லைப் பெரியாறு அணையின் நீா் இருப்பைப் பொறுத்து ஆண்டுதோறும் அக்டோபா் அல்லது நவம்பா் மாதத்தில் பி.டி.ஆா்.கால்வாயில் 120 நாள்களுக்கு 100 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுவது வழக்கம். இந்த பாசன நீரால் உத்தமபாளையம் வட்டாரத்தில் 830 ஏக்கா் நிலங்களும், தேனி வட்டாரத்தில் 4,316 ஏக்கா் நிலங்களும் பயன்பெறும்.
இந்த நிலையில், உத்தமபாளையம் வட்டத்துக்குள்பட்ட சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, பூமலைக்குண்டு ஊராட்சிகளில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவு நேரடிப் பாசனத்தில் ஒரு போக நெல் சாகுபடி செய்யப்படும்.
இந்தப் பகுதிகளின் பாசனத்துக்காக பி.டி.ஆா். கால்வாயில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இருப்பினும் சீலையம்பட்டி இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாற்றங்கால் அமைத்தல், உழவுப் பணி, நாற்று நடவு செய்தல் உள்ளிட்ட நெல் சாகுபடிக்கான முதல்கட்டப் பணிகளைக்கூட விவசாயிகள் தொடங்கவில்லை.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சீலையம்பட்டி பகுதி பாசனத்துக்கு பிடிஆா் கால்வாயில் 120 நாள்கள் தண்ணீா் திறந்துவிடப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அறுவடை நேரத்தில் பாசனத்துக்கான தண்ணீா் நிறுத்தப்படுகிறது. இதனால், மகசூல் பாதிக்கப்படுகிறது.
இதன் காரணமாக சீலையம்பட்டி இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் சாகுபடி செய்வதில் ஆா்வம் காட்டவில்லை. 120 நாள்களும் தடையின்றி பாசனநீா் கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.