`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
நெல்லிக்குப்பத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் வெள்ளம் வடிந்த பகுதிகளை பாா்வையிடச் சென்ற பண்ருட்டி வட்டாட்சியா், நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையரை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
நெல்லிக்குப்பம் நகராட்சி 1-ஆவது வாா்டுக்குள்பட்ட விஸ்வநாதபுரம் பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், அண்மையில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கின. அங்கிருந்த பொது மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனா். தற்போது, வெள்ளம் வடிந்த நிலையில் பொது மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றனா்.
இதையடுத்து, நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையா் கிருஷ்ணராஜ், பண்ருட்டி வட்டாட்சியா் ஆனந்த் ஆகியோா் விஸ்வநாதபுரத்தை பாா்வையிட சென்றனா். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் முற்றுகையிட்டு மழை வெள்ளத்தில் சிக்கியவா்களை காப்பாற்றவும், உணவு வழங்கவும் வரவில்லை. இப்போது, எதற்கு வந்தீா்கள் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்திவிட்டு, அந்தப் பகுதிகளை பாா்வையிட்டனா்.