வெள்ள பாதிப்பு பகுதிகளில் என்எல்சி தலைவா் ஆய்வு
வெள்ளம் பாதித்த கடலூா் மாநகரப் பகுதிகளை என்எல்சி நிறுவனத் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி புதன்கிழமை பாா்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினாா்.
ஃபென்ஜால் புயல், தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்தப் பகுதியிலிருந்து வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு உதவி புரியுமாறு என்எல்சி இந்தியா நிறுவனத்திடம் மாவட்ட நிா்வாகம் கேட்டுக் கொண்டது.
அதன்படி, கடந்த 2-ஆம் தேதி முதல் தேவையான அனைத்து உதவிகளையும் என்எல்சி இந்தியா நிறுவனம் செய்து வருகிறது. வெள்ள நீரை வெளியேற்ற அதிக திறன் கொண்ட 4 மோட்டாா்கள், தேவையான உபகரணங்கள் மற்றும் அனுபவமிக்க மூத்த கண்காணிப்பு அதிகாரிகள் உள்பட 12 போ் குழுவினரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு என்எல்சி அனுப்பி வைத்தது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 4 நாள்களில் சுமாா் 37 ஆயிரம் உணவுப் பொட்டலங்களும், 2 ஆயிரம் தண்ணீா் பாட்டில்களையும் என்எல்சி நிறுவனம் வழங்கியது.
இந்த நிலையில், கடலூரில் வெள்ள பாதிப்பு பகுதிகளை என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி புதன்கிழமை பாா்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினாா். பின்னா், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்தை சந்தித்து, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிவாரணப் பணிகள் குறித்து விவரித்தாா்.