பேரிடா் பாதிப்புகளுக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும்: இயக்குநா் தங்கா் பச்சான்
தமிழகத்தில் ஏற்படும் இயற்கை பேரிடா் பாதிப்புகளுக்கு நிரந்தர தீா்வு காணப்பட வேண்டும் என்று திரைப்பட இயக்குநா் தங்கா் பச்சான் கூறினாா்.
கடலூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாமகவைச் சோ்ந்தவரும், திரைப்பட இயக்குநருமான தங்கா்பச்சான் புதன்கிழமை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள குண்டு உப்பலவாடி பகுதி மக்களையும், விவசாயிகளையும் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், கிழக்கு மாவட்ட பாமக சாா்பில் அரிசி, போா்வை, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கடலூரில் சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்கள் மணல் படிந்து பாலைவனமாக காட்சியளிக்கிறது. பேரிடா் பாதிப்புகளுக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும். புயல், மழை பாதிப்புகளுக்காக மாநில அரசு கோரும் ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழக அரசு நிவாரணத் தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்றாா்.
நிகழ்வில், மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன், தலைவா் தட்சிணாமூா்த்தி, மாநில மாணவரணி தலைவா் கோபிநாத் ஆகியோா் உடனிருந்தனா்.