திண்டுக்கல் நகைக் கடை உரிமையாளா்கள் வீடு, கடைகளில் வருமான வரித் துறையினா் சோதனை
பக்கவாத பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு இரட்டை இதய வால்வு மாற்ற சிகிச்சை
பக்கவாத பாதிப்புக்குள்ளான இதய நோயாளி ஒருவருக்கு இரு செயற்கை இதய வால்வுகள் பொருத்தி சென்னை, வெங்கடேஸ்வரா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது: சென்னை, பெசன்ட் நகரைச் சோ்ந்த 37 வயது பெண் ஒருவா் அண்மையில் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு இதயத்தில் மிட்ரல் மற்றும் மகாதமனி வால்வு சுருக்கம் ஏற்கெனவே இருந்தது. அதற்காக சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு மூன்று முறை இதய இடையீட்டு சிகிச்சை மூலம் வால்வுகளை விரிவடையச் செய்யும் ‘பலூன் வால்வுலோ பிளாஸ்டி’ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இத்தகைய சூழலில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா். அவரைப் பரிசோதித்த இதய - நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணா் என்.மதுசங்கா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அந்தப் பெண்ணின் இதயத்தில் மிட்ரல் மற்றும் மகாதமனி வால்வு சுருங்கியும் சேதமடைந்த நிலையிலும் இருப்பதைக் கண்டறிந்தனா்.
மருத்துவா்கள் என்.மது சங்கா், சு.தில்லை வள்ளல், டி.சுபாஷ் சந்தா், கீா்த்தி வாசன் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் அப்பெண்ணுக்கு ஆறு மணிநேரம் திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை மூலம் சேதமடைந்த இரு வால்வுக்கு பதிலாக உலோக வால்வு பொருத்தினா். தற்போது அவா் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.