பணிப்பெண்ணிடம் கூடுதல் சாவி; நடிகை நேகா வீட்டில் மாயமான ரூ.34 லட்சம் மதிப்பிலான நகை - வழக்கு பதிவு
பாலிவுட் நடிகை நேகா மாலிக், மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் ஷானாஸ் முஸ்தபா ஷேக் என்ற பெண் வேலை செய்து வந்தார். நடிகை நேகா அடிக்கடி பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லக்கூடியவர் என்பதால் நகைகளை அணிந்து விட்டு வீட்டு பீரோவில் வைப்பது வழக்கம். பீரோவையும் பூட்டமாட்டார்.
நேகாவின் தாயாரும் அடிக்கடி வீட்டு வேலைக்கார பெண் முன்னிலையில் நகையை அணிந்துவிட்டு அதனை கழற்றி அப்படியே வைத்துவிடுவது வழக்கம். நேகா தனது வீட்டு வேலைக்கார பெண்ணிடம் தன் வீட்டுச்சாவி ஒன்றை கொடுத்து வைத்திருந்தார். வீட்டில் தானோ அல்லது தனது தாயாரோ இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்தால் வீட்டு வேலையை செய்ய வசதியாக இருக்கும் என்று கருதி இவ்வாறு கொடுத்து வைத்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நேகா படப்பிடிப்புகாக சென்ற நேரம் அவரது தாயார் மஞ்சு காலையில் அங்குள்ள குருத்வாராவிற்கு சென்றுவிட்டார்.

அந்த நேரத்தில் வீட்டு வேலைக்கார பெண் மட்டும் விட்டில் இருந்தார். வெளியில் சென்று இருந்த நேகா வீட்டிற்கு வந்து தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி வைத்தபோது ஏற்கனவே இருந்த நகைகள் காணாமல் போய் இருந்தது. இதையடுத்து நேகாவும், அவரது தாயாரும் சேர்ந்து மீண்டும் வீடு முழுக்க நகைகளை தேடிப்பார்த்தனர். ஆனால் வீட்டில் நகைகள் கிடைக்கவில்லை. வேலைக்கு வந்து கொண்டிருந்த வேலைக்கார பெண் வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டார். இதையடுத்து நேகா அம்போலி போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் பணிப்பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.