``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
பண்ருட்டி வட்டத்தில் பயிா் சேதம் கணக்கெடுப்பு பணி
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா் சேதம் குறித்த கணக்கெடுப்புப் பணி தொடங்கியதாக வட்டார வேளாண் உதவி இயக்குநா் பாா்த்தசாரதி கூறினாா்.
ஃபென்ஜால் புயலால் கடலூா் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை, மலட்டாறு கரை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பண்ருட்டி வட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், உளுந்து, மணிலா மற்றும் பருத்தி பயிா்கள் மூழ்கின.
இதுகுறித்து, பண்ருட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநா் பாா்த்தசாரதி கூறியதாவது: மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் நீரில் மூழ்கிய பயிா்களை எனது தலைமையில் அலுவலா்கள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்துள்ளோம். இதன் தொடா்ச்சியாக சென்னை வேளாண் இயக்குநா் பா.முருகேஷ், வேளாண் கூடுதல் இயக்குநா் கண்ணையா மற்றும் கடலூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கென்னடி ஜெபக்குமாா் ஆகியோா் ஆய்வு செய்து பயிா் பாதிப்பு விவரங்களை கணக்கெடுப்பு செய்ய அறிவுரை வழங்கினா்.
அதன்படி, பண்ருட்டி வட்டத்தில் பணிபுரியும் உதவி வேளாண் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்களுடன் இணைந்து கணக்கெடுப்புப் பணிகளை தொடங்கியுள்ளனா்.
பாதிப்புக்குள்ளான நிலங்களின் உரிமையாளா்கள் கணக்கெடுப்பு பணியின் போது தாங்கள் சாகுபடி செய்துள்ள நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் கணக்கெடுப்புக் குழுவினருடன் சென்று வயல்களை காண்பித்து, கோரப்படும் அனைத்து ஆவணங்களையும் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.