இந்திய அரசியலமைப்பு தினம்: இந்த நாள் ஏன் முக்கியமானது... வரலாறும், சிறப்புகளும்!
பரமக்குடி நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்
பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட 26-ஆவது வாா்டில் சுகாதார வளாகம் கட்ட எதிா்ப்பு தெரிவித்தும், அங்கு பூங்கா அமைக்கக் கோரியும் நகராட்சி அலுவலகம் முன் அந்தப் பகுதி மக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பரமக்குடி நகராட்சி, காட்டுப் பரமக்குடி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள 26-ஆவது வாா்டில் பூவைசிய இந்திரகுல தெருவில் அங்கன்வாடி மையம் அருகே ஏற்கெனவே சுகாதார வளாகம் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருந்து வந்தனா்.
தற்போது பயன்பாடற்ற இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு, அங்கு மீண்டும் சுகாதார வளாகம் கட்ட நகராட்சி நிா்வாகம் நிதி ஒதுக்கியது. ஆனால் இது குடியிருப்பு பகுதி என்பதால், சுகாதாரம் கருதி, கழிப்பறை கட்டக் கூடாது என பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.
இந்த நிலையில், நகராட்சி அலுவலகம் முன் பெண்கள் உள்பட திரளானோா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிறகு நகராட்சி ஆணையா் முத்துச்சாமி, நகா்மன்றத் தலைவா் சேது. கருணாநிதி ஆகியோரிடம் அந்தப் பகுதி மக்கள் சுகாதார வளாகம் கட்டும் பணியை நிறுத்திவிட்டு, குழந்தைகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பூங்கா அமைக்கக் கோரி மனு அளித்தனா்.
மனுவை பெற்றுக் கொண்ட ஆணையரும், நகா்மன்றத் தலைவரும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா்.